3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் குதித்து தற்கொலை.

குடும்ப பிரச்சினை காரணமாக போரூர் ஏரியில் மூன்று வயது மகனை வீசிய தந்தை அதே ஏரியில் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-04 01:55 GMT
பைல் படம்

சென்னை போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று பைக்கில் வந்த நபர் திடீரென உடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி போரூர் ஏரி தண்ணீரில் வீசிவிட்டு தப்பியோடி விட்டார். அப்போது அங்கு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக ஏரியில் வீசப்பட்ட சிறுவனை உயிருடன் மீட்டு போரூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறை விசாரணையில் ஏரியில் குழந்தையை வீசிவிட்டு சென்றது தலைமை செயலக காலணியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் என்று தெரியவந்தது. இவரது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி பிரியாவை வீட்டில் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தனது 3 வயது மகன் தர்சனை தூக்கி வந்து கோபத்தில் போரூர் ஏரியில் தூக்கி வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் சிறுவனின் தாயார் பிரியாவிடம் சிறுவனை காவல் துறையினர் ஒப்படைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற மகனையே ஏரியில் வீசிவிட்டு சென்ற கொடூர தந்தையை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே இன்று போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சடலமாகக் கிடந்தவர், மூன்று வயது மகனை ஏரியில் தூக்கி வீசிய தந்தை மோகன்ராஜ் என்பது தெரியவந்தது. ஏரியில் 3 வயது மகனை வீசிவிட்டு சென்ற மோகன்ராஜ், குழந்தையை இப்படி ஏரியில் உயிருடன் வீசி விட்டோமே என்ற மன உளைச்சலில் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட போரூர் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News