மாற்றுத்திறனாளிகள் கிராம குடிநீர் தொட்டியில் மலம்!
கோடநாடு அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரியா காலனி உள்ளது. இந்த கிராமத்தில் 30 மாற்றுத்திறனுடையோர் குடும்பங்கள் உள்பட சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தங்களது கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ளது என்றும், மலம் கலந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரியா காலனி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 28-ம் தேதி இரவு மர்ம நபர்கள் மலம் கலந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை மறுநாள் காலை கிராம மக்கள் கண்டு, கோடநாடு ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் கிராமத்தில் உள்ள யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்பதால், பேசி தீர்வு காண முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து பிரியா காலனி ஊர்த் தலைவரான மாற்றுத் திறனாளி மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மாற்றுத்திறனுடைய மக்கள் வாழ்ந்து வரும் பிரியா காலனியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கழித்து விட்டு சென்றுள்ளனர். இதேபோல விஷத்தை கூட கலந்து விட்டு செல்ல வாய்ப்புள்ளது. எனவே இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து குன்னூர் ஆர்.டி.ஓ. சதீஷ், துணை காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் அதிகாரிகள் பிரியா காலனிக்கு மதியம் 3 மணிக்கு நேரில் சென்று சுமார் 3 மணி நேரம் வீடு, வீடாக விசாரணை மேற்கொண்டனர். உள்ளூர் மக்களிடம் யார் மீது சந்தேகம் உள்ளது என கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து விட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறுகையில், "புகாரின் அடிப்படையில், ஆர்.டி.ஓ., தலைமையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதுபோல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது," என்றார்.