ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்டது. குறிப்பாக கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்ற அந்த புயல் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீண்டு வருவதற்குள் அடுத்ததாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல அறிவிப்பின்படி, இந்திய கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் பலத்த காற்று வீசும். அதன் வேகம் மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டராகவும், அதிகபட்சம் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. அதைத்தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீனவர்கள் முன்கூட்டியே எடுத்துள்ளனர். மீன்பிடிக்க ஏற்பட்டுள்ள தடையால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே அடுத்தடுத்து மீனவர்கள் சிறைபிடிப்பு, இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீன்பிடி தொழில் சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.