வெள்ளத்தால் விவசாயம் பாதிப்பு: பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை!
தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் கிராமத்தில் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-02-19 06:23 GMT
தூத்துக்குடி அருகே உள்ளது குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய பாண்டியன். பெட்டைகுளம் விவசாய சங்க ஆட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சுமார் 20 ஏக்கர் குலையன் கரிசல் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த விவசாய நிலத்தில் தனது மகன்கள் அன்புராஜ் மற்றும் அழகருடன் இணைந்து வாழை மற்றும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17 ,18 ஆம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகவும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பொட்டை குளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் விவசாயி விஜய பாண்டியனின் விவசாய நிலங்கள் முழுவதும் முற்றிலுமாக அழிந்து சேதமானது. மேலும் தற்போது வரை விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து குளத்தில் ஏற்பட்ட உடைப்புக்காக விவசாய சங்கம் மூலம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக விஜய பாண்டியனும் பணம் சேர்த்து குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு சேர்த்து உடைப்பை அடைத்துள்ளனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆதிமூலத்திடம் குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பிற்குரிய பணத்தை விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயி விஜயபாண்டியன் கேட்டுள்ளனர். அதற்கு தர முடியாமல் காலம் தாழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசு சார்பில் ஹெக்டேருக்கு ரூபாய் 17,000 நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டு இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக முற்றிலுமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயி விஜய பாண்டியன் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அவரது மனைவி சண்முக கணிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தூத்துக்குடியில் உள்ள மகன் அழகர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன வேதனையில் இருந்த விவசாயி விஜய பாண்டியன் நேற்று இரவு விவசாய நிலத்திற்கு அடிக்கப்படும் களைக்கொல்லி பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார் இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட விஜயபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலையில் மத்திய மாநில அரசுகள் விவசாயியை கண்டுகொள்ளாத நிலையில் மனமடைந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தந்தை சாவிற்கு மத்திய மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக வேறு விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு முன்பாக மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.