சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் நடந்து வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நீர்வளத்துறை பொறியாளர்களுடன் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பேசிய அமைச்சர் துரைமுருகன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் பருவமழைக்கு முந்தைய முன்னேற்பாட்டு பணிகளாக ரூ.38.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய பகுதிகளான வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கூவம் மற்றும் அடையாறு போன்றவற்றில் உள்ள மிதக்கும் தாவரங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் வருகிற 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மேலும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிக்காக ரூ.590 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், முக்கிய பகுதிகளான தணிகாச்சலம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், மாதவரம் ரெட்டேரி மற்றும் கெருகம்பாக்கம் கால்வாய் போன்றவற்றில் நடந்து வரும் பணிகள் அனைத்தையும் வருகிற 30ம் தேதிக்குள் அதிகாரிகள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேவையான மணல் மூட்டைகள், காலி கோணிகள் மற்றும் சவுக்கு கம்புகள் ஆகியவற்றை பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக ஆங்காங்கே போதுமான இருப்பு வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.