ஹோட்டல்களில் திடீர் ஆய்வு செய்த அதிகாரிகள்
காலவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஓட்டல், வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் பறிமுதல் செயய்ப்பட்டன. ஏற்காட்டில் உள்ள சில ஓட்டல்களில் தரம் இல்லாத உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதகாவும், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவனுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், ஏற்காடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சுருளி மற்றும் அலுவலர்கள் நேற்று ஏற்காடு, ஒண்டிக்கடை ரவுண்டானா, மரப்பாலம் பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது,சில வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட 48 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், உணவகங்களில் ஆய்வு செய்தபோது, 2 கிலோ பழைய மீன்கள், 12 கிலோ அழுகிய காய்கறிகள், காலாவதியான சாஸ் 2 கிலோ, 5 கிலோ காலாவதியான கடலைமாவு, 3 கிலோ பிரட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.21 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் அந்த உணவு பொருட்களை அங்கேயே கொட்டிஅழித்தனர். மேலும், இது சம்பந்தமாக 3 உணவகங்களுக்கு அபராதமும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.