சென்னையில் தங்கு தடையின்றி உணவுப் பொருட்கள் -அமைச்சர் சக்கரபாணி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை விமான நிலையம் வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சென்னையில் வெள்ளத்தால் நியாய விலை கடைகள் மற்றும் உணவுப் பொருள்கள் பாதிப்பு குறித்த கேள்விக்கு: அண்ணா நகர் மற்றும் திருவான்மியூர் ஆகிய இரண்டு குடோன்களில் மட்டும் தண்ணீர் புகுந்துள்ளது. 60 கடைகளில் சேதம் என்று பார்த்தபோது 11 கடைகளில் மட்டும் அரிசி, பருப்பு, சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரிய பாதிப்பு இல்லை, எனவே உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற கேள்விக்கு: முதல்வர் முடிவெடுப்பார். நல்ல செய்தி வரும்.
பொங்கல் பரிசுப் பொருட்கள் குறித்த கேள்விக்கு: முதல்வர் முடிவெடுப்பார். அதை நான் சொல்ல முடியாது. தட்டுப்பாடு இன்றி பொருள்கள் கொடுக்கப்படுகிறது அதிக சேதம் இல்லை. போதுமான அளவிற்கு பொருட்கள் இருக்கிறது. தட்டுப்பாடு இல்லை அதற்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கெட்டுப்போன உணவு அளிக்கப்படுவதாக இருந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு: தாம்பரம் மாநகராட்சி பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது மக்களுக்கு தரமான பொருட்கள் கொடுத்து வருகிறோம். மின்சாரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து பால் கொண்டு சென்று கொடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக கொடுத்துள்ளோம். தண்ணீர் லாரிகளில் கொடுத்து வருகிறோம். தண்ணீர் வடிந்து விட்டது. 90% இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது ஒரு சில பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை எடுப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. 2015 இல் மழை பெய்தளவு 33மிமீ ஆனால் தற்போது 52மிமீ ஒரே நாளில் பெய்துள்ளது. அதுதான் காரணம் ஆனால் தண்ணீர் பாதிக்காத அளவுக்கு முதல்வர் சீரிய ஏற்பாடு செய்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் என்றார்.