போதை தடுப்பு போலீசார் என கூறி ஐ.டி நிறுவன ஊழியரிடம் மோசடி

தஞ்சாவூரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரிடம், மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் போல, வீடியோ காலில் பேசி, நூதன முறையில், 10.11 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபர்களை இணையதளக் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வருகின்றனர்.

Update: 2023-12-27 04:24 GMT

இணையதள மோசடி 

தஞ்சாவூர், புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த 48 வயதான நபர். இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர். 'ஒர்க் ப்ரம் ஹோம்' என்ற அடிப்படையில், வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், கடந்த 21 ஆம் தேதி மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுவதாக ஒரு நபர் பேசியுள்ளார். அப்போது பேசிய நபர், வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில், போதைப்பொருட்கள், ரத்து செய்யப்பட்ட சிம்கார்டுகள் உட்பட பல பொருட்கள் இருந்தன. உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளார்.  

இருப்பினும், அந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர், "வெளிநாட்டிற்கு தான் எந்தப் பார்சலும் அனுப்பவில்லை என கூறியுள்ளார். போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் போன்று அமைப்பு கொண்ட ஒரு அறையில் இருந்து வீடியோ காலில் பேசிய நபர்கள், "தனி அறையில் இருந்து தான் பேச வேண்டும். வேறு யாரிடம் ஆலோசனை செய்யக்கூடாது. நீங்கள் பார்சல் அனுப்பவில்லை என்றால் ஆன்லைனில் புகார் செய்து, அதற்கு பணம் கட்ட வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து உங்கள் மீது தவறு இல்லை என்றால் பணத்தை திரும்ப தருவோம்" என பேசியுள்ளார்.

இதனால் பயந்து போன அவர், அவர்கள் கூறிய வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 10.11 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். மீண்டும் வீடியோ காலில் வந்த நபர்களிடம் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக, கூறிய உடன் மர்ம நபர் இணைப்பை துண்டித்தார்.   பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த  அவர்  தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News