போதைப்பொருள் ஒழிப்பில் அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்
போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.முதலமைச்சர் இந்த விவகாரத்தில் எந்த சமரசமும் இன்றி குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சி பகுதியில் சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- போதை பொருட்களை பொருத்தமட்டில் அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏராளமான கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் எந்த சமரசமும் இன்றி குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சிகளை முடக்குவதில் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல. குமரி மாவட்டத்தில் ஏராளமான புதிய வழித்தடங்களில் புதிதாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ஒரு சில வழித்தடங்களில் பஸ்களை இயக்கும்போது அதற்கு போதுமான வரவேற்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும். கோவில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.