துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர்!

தவறான கல்விக் கொள்கையால், பட்டதாரிகள் வேலைக்காக பிச்சை எடுக்கும் நிலை நிலவுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Update: 2024-05-27 14:27 GMT

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 3-ம் ஆண்டு மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தொடங்கியது. பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார், காரக்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குநர் பார்த்த பிரதி சக்கரபோர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ., உலகளாவிய மனித மதிப்புகளுக்கான தேசிய குழு தலைவர் சரண், சிஸ்கோ நிர்வாக ஆலோசகர் ஸ்ருதி கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:- கடந்த 2021-ம் ஆண்டு ஆளுநராக நான் பொறுப்பேற்று பல்கலைக்கழகங்களின் வேந்தரானபோது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரம் குறைந்து மோசமான நிலையில் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் பிரச்னைகளுடன் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்து அவற்றை ஒன்றிணைக்கவே இந்த மாநாடு 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உயர்கல்வியின் பாதுகாவலர்களாக உள்ளனர். அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் அவர்களுடைய பங்கு இன்றியமையாதது. புதிய தேசிய கல்விக்கொள்ளை ஏராளமான ஆலோசனைக்கு பின் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கல்வி கொள்கை நமது நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 6-வது இடத்தில் இருந்த நாம் 11-வது இடத்திற்கு பின் தங்கிவிட்டோம். தற்போது மீண்டும் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.

மிக விரைவில் 3-வது இடத்திற்கு முன்னேற உள்ளோம். தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த பட்டதாரிகள் வேலைக்காக பிச்சை எடுக்கும் நிலை நிலவுகிறது. கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவரவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிற்காலம் கேள்விகுறியாகிவிடும். இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தது. இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். திருவள்ளுவர் கற்பித்தல் குறித்து "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக" என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது.

எனவே பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 19 மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் 3 மத்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News