திருச்செந்தூர் கோயில் வாசலுக்கு வராத அரசுபஸ்கள் :பக்தர்கள் கடும் அவதி

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் டோல்கேட் கட்டணத்தை உயர்த்தியதால் அரசு பஸ்கள் கோயில் வாசலுக்கு செல்வதில்லை. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

Update: 2024-02-08 09:26 GMT

திருச்செந்தூர் கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.  இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

தற்போது கோவிலில் ரூபாய் 200 கோடி மதிப்பில் பெருந்திட்டவளாகப் பணிகள் கடந்த ஒன்றை ஆண்டுகளாக நடந்து வருகிறது.  இந்நிலையில், கோயில் வளாகத்தில் அரசு பேருந்துகள் வந்து செல்லாததால் பக்தர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

வெளியூரிலிருந்து வரும் அரசு பஸ்கள் முன்பெல்லாம் கோவில் வாசல் வரை வந்து பக்தர்களை ஏற்றி இறக்கி செல்வது வாடிக்கை. தற்போது கோயில் டோல்கேட் கட்டண பிரச்சனையில் அரசு பஸ்கள் கடந்த சில மாதங்களாக கோயில் வாசல் வரை வருவதை தவிர்த்து வருகின்றன. 

குறிப்பாக தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை உள்ளிட்ட மார்க்கங்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கோயில் வாசல் வரை செல்லாமல் கீழ ரதவியில் உள்ள சன்னதி தெரு முகப்பில் ஒருத்தர்களை இறக்கி விட்டு சென்று விடுகின்றன. கோயிலுக்கு குடும்பத்துடன், முதியவர்கள் குழந்தைகள் சிறுவர்களுடன் அழைத்து வரும் நீண்ட தூரம் நடந்து நகர பகத்சிங் பஸ் ஸ்டாண்டற்கு வந்து தான், பஸ் ஏறி வெளியூர் செல்ல வேண்டும்.  பல பக்தர்கள் நகர பஸ் ஸ்டாண்டிற்கு வழி தெரியாமல் அங்கும் இங்கும் அல்லல்படுகின்றனர்.

பல நேரங்களில் பஸ் பஸ் ஸ்டாண்டிற்கு எப்படி செல்ல வேண்டும்? என பெண்கள் முதியவர்கள் ரோடுகளில் கேட்பது அன்றாட நடைமுறைகளில் ஒன்றாகி விட்டது. பல நேரங்களில் வழி தெரியாத பக்தர்கள் ஊர் முழுவதும் சுற்றி மீண்டும் கோவில் வாசலை சென்று விடும் அவல நிலை தொடர்கிறது.

இதுகுறித்து திருச்செந்தூர் ஆர்டிஒ குருச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படடது. இதுகுறித்து விசாரித்து ஆர்டிஓ குருச்சந்திரன் திருச்செந்தூர் நகருக்கு வரும் அனைத்து பஸ்களும் கோயில் வாசல் வரை செல்ல வேண்டும் உத்தரவிட்டார். ஆனாலும் இன்று வரை அரசு பஸ்கள் கோயில் வாசல் செல்லாமல் தொடர்ந்து உத்தரவை புறக்கணித்து வருகின்றன. 

கோவில் நிர்வாகம்  டோல்கேட் கட்டணம் ரூ.200ஐ என்பதை ரத்து செய்துவிட்டு பழையபடி ரூ.50 மட்டும் வசூல் செய்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் பணம் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது. எனவே பக்தர்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். 

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை பாதிக்கும் இப்பிரச்சனை குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மற்றும் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனும் கண்டுகொள்ளவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, அமைச்சர்கள் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News