அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு - இன்றே கடைசி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து வேறொரு பள்ளிக்கு இடம் மாறுதல் பெற விருப்பம் உள்ளவர்கள், கல்வி மேலாண்மை தகவல் முகமை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 12ஆம் தேதி தொடங்கியது, அது இன்றுடன் முடிவடைய உள்ளது. இடம் மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை 63 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து உள்ளனர். தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14 ஆயிரத்து 78 பட்டதாரி ஆசிரியர்களும், ஏழு ஆங்கிலத்தில் 106 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், நான்கு ஆயிரத்து 39 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
மேலும் பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 719 ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 20, 446 ஆசிரியர்களும், முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14 ஆயிரத்து 308 ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 913 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 ஆசிரியர்கள் என இதுவரையில் 63 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பித்து உள்ளனர். இன்று மாலையுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்ததும் வருகிற 24 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.