மலை பிரதே பேருந்துகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும்: சசிகலா
தமிழகத்தில் மலை பிரதேசங்களில் இயக்கப்படும் பேருந்துகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
Update: 2024-05-01 04:10 GMT
வி கே சசிகலா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 11 வது கொண்டை ஊசி வளைவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 6 நபர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பாக மலைப்பிரதேசங்களில் இயக்கப்படும் பேருந்துகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றனவா? பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா? பயணிகள் அளவுக்கு அதிகமாக பேருந்துகளில் ஏற்றப்படுகிறார்களா? என்பதையெல்லாம் திமுக தலைமையிலான அரசு முறையாக ஆய்வு செய்திட வேண்டும். இதன் மூலம் தேவையற்ற மனித உயிரிழப்புகளை கண்டிப்பாக தடுக்க முடியும். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது. போன உயிர்களை யாராலும் மீண்டும் கொண்டு வர முடியாது. எனவே, ஓட்டுனர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.