பூவிருந்தவல்லி அருகே துப்பாக்கி பறிமுதல்: 3 பேர் கைது

துப்பாக்கி பறிமுதல்

Update: 2023-11-16 12:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை திரௌபதி அம்மன் கோயில் அருகே அதிவேகமாக வந்த காரை நிறுத்த போலீசார் முயன்றனர். ஆனால் காரை நிறுத்தாமல் போலீசார் மீது மோதுவது போல் வந்து அந்த காரை ஓட்டி வந்தவர்கள் தப்பி சென்றனர் .

இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். காரில் வந்த நான்கு பேரில் ஒருவர் மட்டும் இறங்கி தப்பி ஓடி விட்டார். மூன்று பேரை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் காரில் வந்தவர்களிடம் சோதனை செய்ததில் அவர்கள் சட்டவிரோதமாக 9 எம்.எம். கைதுப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் காரில் வந்தவர்கள் திருவள்ளூர் அரண்வாயில் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்(24), பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்த சுனில்(23), மேப்பூர் தாங்கலை சேர்ந்த நரேஷ்குமார்(23) என்பதும், தப்பி ஓடியவர் நாகேந்திரன் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நாகேந்திரன் என்பவனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பாஜக பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கர் என்பவர் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் சாந்தகுமார் என்பவர் இவர்களிடம் கைத் துப்பாக்கி கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களிடம் கைத் துப்பாக்கி எப்படி வந்தது, எங்கு வாங்கப்பட்டது, ஏன் இவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதை எடுத்துக்கொண்டு யாரையாவது கொலை செய்யும் நோக்கில் சென்றார்களா, அவர்கள் கூறுவது உண்மைதானா, வேறு ஏதும் சதி திட்டமா என்று பல்வேறு கோணங்களில் நசரத்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News