நிவாரணப் பணிக்கு சென்ற சுகாதார அலுவலர் பலி - முதல்வர் இரங்கல்
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணியினை மேற்கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி சென்னைக்கு செல்லும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் செய்தி மற்றும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "சாலை விபத்தில் சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி உயிர் இழந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும் விபத்தில் உயிரிழந்த ஜெயபால்மூர்த்தி குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்திரவிடுவதாகவும். மேலும், அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு உடனடியாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் முருகானந்ததிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.