ஊட்டியில் கொட்டிக் தீர்த்த கனமழை

ஊட்டியில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-01 13:37 GMT

மழை 

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிய நிலையில், தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மேகமூட்டத்துடனான காலநிலை நிலவியது. பகல் 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மூன்று மணி நேரம் ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.

ஊட்டியில் மட்டும் 50 மி.மீ., மழை பெய்தது. இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ரயில் நிலைய தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் ஆகிய பகுதிகளிலும் தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன.

சேரிங்கிராஸ் பகுதியில் வணிக வளாகங்களின் முன்பகுதியில் மழைநீர் புகுந்தது. 25வது வார்டுக்கு உட்பட்ட காந்தல் பகுதியில் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் கீதா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல வருடங்களாக மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதை தொடர்ந்து போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். ஊட்டியில் நேற்று 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 86 சதவீதமாக இருந்தது. நீலகிரியில் நிளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தீவிரமடைய தொடங்கி இருப்பதால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். 

Tags:    

Similar News