தமிழக-கர்நாடக எல்லை பகுதிகளில் கனமழை : போக்குவரத்து பாதிப்பு

தமிழக-கர்நாடக எல்லை பகுதிகளில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-22 02:59 GMT

 ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. தமிழக எல்லை பகுதியான ஜூஜூவாடி மற்றும் கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளி ஆகிய இடங்களிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. ஓசூர் சிப்காட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளால் அந்த பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போது பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி வந்த கார்கள், பேருந்துகள், சரக்கு லாரிகள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் தமிழக எல்லை பகுதியான ஜூஜூவாடி, சிப்காட் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. அதேபோல கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதி வரையிலும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் அப்பகுதிக்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிமீ நீளத்திற்கு போக்குவரத்து பாதிப்பு காணப்பட்டது. மழை காரணமாக திடீரென ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்தனர்.

Tags:    

Similar News