வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!!
சென்னையில் இன்று தொடங்கி 15ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் 2-வது சுற்றுக்காக காத்திருக்கும் சூழலில், அதற்கான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஏற்கனவே கடந்த 6 அல்லது 7-ந் தேதிகளில் உருவாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் 8, 9-ந் தேதிகளில் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று உருவாவதற்கான சூழல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் உருவாகவில்லை. இப்படியாக 3 முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. பிற்பகல் 2.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 2 நாட்களில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், சென்னையில் இன்று தொடங்கி 15ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.