ஊட்டியில் கனமழை - சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டியில் பெய்து வரும் கன மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Update: 2024-05-19 00:51 GMT

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று முன்தினம் நீலகிரி உட்பட சில மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என (ஆரஞ்சு அலர்ட்) விடுத்தது. அதி கனமழையை எதிர்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் அருணா தெரிவித்தார்.  மூன்று நாள்களுக்கு நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் ஊட்டி நகர் பகுதியில் நேற்று மதியம் தொடங்கிய கன மழை விட்டு, விட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்தது. காலை முதல் இருந்த காலநிலையை ரசித்த சுற்றுலா பயணிகள், மதியம் பெய்த மழையை எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் இருந்தவர்கள் அவதிக்குள்ளாகினர். ஊட்டி ரயில்வே தரைப்பாலம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன மழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. குன்னூர் பெட்போர்ட் டார்லிங்டன் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோத்தகிரி அருகே இடுகரை பகுதியில் சாலையில் விழுந்த மரமத்தை தீயணைப்புத் துறையினரால் வெட்டி அகற்றப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு படையினர் 90 பேர் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இதேபோல் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி, கோவை எல்லையில் தயார் நிலையில் உள்ளனர். ஊட்டியில் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 90 சதவீதமாக இருந்தது. காற்றின் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டர் என்று அளவில் இருந்தது. இந்தநிலையில் நீலகிரியில் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) நாளை  (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News