பெஞ்சல் புயல்; சென்னை முழுவதும் விடிய விடிய கனமழை!!
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த தரை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை செய்து வருகிறது. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. மேலும், கோயம்பேடு, வடபழனி, முகப்பேர், போரூர், மதுரவாயல், வானகரம், தாம்பரம், மேடவாக்கம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் வடசென்னை பகுதிகளில் திருவொற்றியூர் ராஜாஜி நகர், காரில் நகர், மணலி எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும், மணலி நெடுஞ்சாலை, காமராஜ் சாலை போன்ற பகுதிகளில் சாலைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி எண்ணூர் – திருவொற்றியூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கிறது, இதனால் அலைகள் பாறை மீது பெரும் சத்தத்துடன் அடிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் படகுகள், வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். தென் சென்னையில் ஓஎம்ஆர் சாலை , துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் தெரு, பெருங்குடி சீவரம் தெருக்களிலும், தாழ்வான பகுதிகளான கள்ளுக்குட்டை, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர், சோழிங்கநல்லூர் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழை நீரை அப்புறபடுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள சுரங்க பாதைகளில் மழை வெள்ள நீர் தேங்கி உள்ளது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை புறநகர் வேளச்சேரி மேம்பாலத்தில் முன்னெச்சரிக்கையாக வாகன உரிமையாளர்கள் கார்களை நிறுத்தி வருகின்றனர். சென்னை மாநகர் சாலையில் அரசு பேருந்துகளைத் தவிர தனியார் வாகனங்கள் மிக குறைவான எண்ணிக்கையில் செல்கிறது. அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 68.4 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஊழியர்களும், காவல் துறையினரும், தன்னார்வலர்களும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.