சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு.
சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாந்தனின் உடலை கொண்டுசெல்வதற்கான இலங்கை தூரதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவற்றை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.நான்கு ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி முகாமிலிருந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தது வரை உள்ள தகவல்களை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்தது. பிப்ரவரி 27 ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், மாரடைப்பால் அவரது உடல்நிலை மோசமானது. பிப்ரவரி 28 ல் மரணம் அடைந்தார் என்று தமிழக அரசு தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.