உளுந்து பயிரிட்டால் அதிக மகசூல்:வேளாண்மை துணை இயக்குனர் தகவல்!

சித்திரைப் பட்டத்தில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-09 07:11 GMT

உளுந்து

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் சித்திரை பட்டத்தில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வேளாண் துணை இயக்குனர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகளின் நிலத்திற்கே சென்று உளுந்து பயிரிட கோடை உழவு மேற்கொண்ட விளாப்பாக்கம் மற்றும் மோசூர் பகுதிகளில் பசுந்தாள் உரம் பயிரிட்ட விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். உளுந்து சாகுபடி செய்வது குறித்து இயக்குனர் செல்வராஜ் கூறுகையில்,"சித்தரை பட்டத்தில் உளுந்து பயிரிட்டால் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம்.

உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு எட்டு கிலோ விதை போதுமானதாகும். கோடை பருவத்தில் உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெற உயர் விளைச்சல் ரகங்களான வம்பன் -8, வம்பன்-9, வம்பன் - 10, போன்ற ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

விதைத்த 15 நாட்களில் செடிகளை கலைத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பராமரிக்க வேண்டும். உளுந்தை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக பறித்து களை எடுத்தல் வேண்டும்.

வேர் அழுகலை கட்டுப்படுத்த டிரைக்கோ டெர்மா விரிடி ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து மண்ணில் இடவேண்டும் அல்லது வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ இட வேண்டும் என்றார்.

Tags:    

Similar News