அரியலூரில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

அரியலூரில் நடைப்பெற்ற கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-05-11 01:43 GMT

வழிகாட்டல் நிகழ்ச்சி

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்காக கல்லூரிக் கனவும் எனும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில், 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு காரணம் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பங்கு முக்கியம். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்,ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டதன் காரணமாகவே தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

அரியலூர் மற்ற மாவட்டங்களை விட பின்தங்கிய மாவட்டமாக இருந்த நிலை மாறி சமீபகாலமாக கல்வியில் முன்னேறி வருவது மிகவும் ஆரோக்கியமான அறிகுறியாகும். கல்வியில் முன்னேற்றம் பெரும் மாநிலங்கள், நாடுகள் சமூக மற்றும் பொருளதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும். அதனப்படையில் அரியலூர் மாவட்டம் கல்வியில் முன்னேறி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளே அதிகமாகும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொண்டதன் காரணமாகத் தான் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாணவர்கள் கல்வியின் மீது கொண்ட ஈடுபாடாகும்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் 24,674 பள்ளி மாணவ மாணவிகளும், 4,298 பொறியியல் மாணவ மாணவிகளும், 5,294 கலை அறிவியல் படித்த மாணவ மாணவிகளும் என மொத்தம் 34,266 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மாணவர்கள் பொருளதார சூழ்நிலை காரணமாக கல்வி பயில முடியாமல் இருப்பதை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு கல்வி கடனுதவிகள் வழங்க தமிழக அரசால் ஊக்கவிக்கப்பட்டு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்கள் வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் உயர்வுக்குப் படி என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக மாணவிகள் உயர்கல்வி கட்டாயம் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் கல்வி கற்று நல்ல வேலைகளில் சேர்ந்து வாழ்கையில் சிறந்த நிலைக்கும் வரவேண்டும். உயர்கல்வி குறித்த சந்தேகங்கள் இருந்தால் கல்வி நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

தொலைபேசி வாயிலாக உங்கள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடமும் அறிவுரைகளை பெறலாம். அனைத்து மாணவர்களும் உயர்கல்வியியை தேர்வு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் கல்வியில் முன்னேற்றம் பெற முடியும். கல்வியில் முன்னேற்றம் பெற்றால் தான் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடையும் என்றார். பின்னர் அவர், 10 வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் , உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி , சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜித்தா , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். மேலும் செந்துறையைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் விஜயகோபால் லண்டலினிருந்து காணொலி வாயிலாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார். முடிவில் திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநர் செல்வம் நன்றி தெரிவித்தார். படவிளக்கம்:அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள அனிதா நினைவு கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரிக் கனவு எனும் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா.

Tags:    

Similar News