கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Update: 2024-04-27 13:04 GMT

உயர்கல்வி வழிகாட்டல்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழக அரசு மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்வி கடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலை வாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்க வேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயில வேண்டும். தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. நமது விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு காரணங்களால் கல்வி கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு உதவிடும் வகையில் விருதுநகர் கல்வி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. எனவே கல்வி பயில்வதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. யார் ஒரு செயலை தொடர்ந்து முயற்சிக்கிறார்களோ அவர்கள் அறிவு, திறமை பெற்று அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கின்றது. அடுத்து வரக்கூடிய 30 ஆண்டுகளில் வாய்ப்புகள் உள்ள துறைகளைப் பற்றி தெரிந்து கொண்டு படிக்க வேண்டும். இன்று தனக்கும் தனது குடும்பத்திற்கும் எது கடினமாக இருக்கிறதோ, அதை எளிதாக முடிப்பதற்கான பணியை கல்வி செய்கிறது.

எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்து கொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று, தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்து கொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் திரு.ரமேஷ், உட்பட அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News