பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி கைது!
கோவையில் பி.எஸ்.ஓ வேண்டும் என்பதற்காக மீன் கடைக்காரர் மீது பொய்யான புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த சூர்ய பிரசாத் இந்து முன்னணி செல்வபுரம் நகரத் தலைவராக இருந்து வருகின்றார்.இவர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறையில் கேட்டிருந்தார்.ஆனால் அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இவர் கடந்த 30 ஆம் தேதி இரவு செல்வபுரம் வடக்கு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த மீன் கடை நடத்தி வரும் அசாருதீன் என்பவர் தன்னை செல்போனில் படம் எடுத்ததாக கூறி அவரை மிரட்டி செல்போனை பறித்து போலீஸில் ஒப்படைத்தார்.
மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். செல்வபுரம் போலீஸார் அந்த செல்போனை ஆய்வு செய்த போது, அந்த செல்போனில் புக்கபடங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த செல்போனை சைபர் தடயவியல் துறையினருக்கு சோதனைக்கு போலீசார் அனுப்பினர்.அதை சோதித்த தடயவியல் துறை அதிகாரிகள் அந்த செல்போனில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் எதுவும் டெலிட் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து சந்தேகம் அடைந்த செல்வபுரம் போலீசார் சூரிய பிரசாத்திடம் மேற்கொண்ட விசாரணையில் , தனக்கு தனி பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக அசாருதீனை மிரட்டி செல்போனை பறித்து பொய் புகார் அளித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அசாருதீனிடம் புகாரை பெற்ற செல்வபுரம் போலீசார் அதன் அடிப்படையில் இந்து முன்னணி பிரமுகர் சூர்ய பிரசாத்தை கைது செய்தனர்.அவர் மீது கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல் முறையற்ற தடுப்பு, ஆபாசமாக பேசுதல் உட்பட ஐந்து பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மீன்கடை நடத்தி வருபவர் மீது பொய்புகார் அளித்து இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.