சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது - ஆளுநர் ரவி குற்றச்சாட்டு!

தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது, திராவிட இயக்க வரலாறு அதிக அளவில் உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

Update: 2024-05-29 02:03 GMT

ஆளுநர் ரவி 

நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் மாநாடு நேற்று மாலை நிறைவடைந்தது.

மாநாட்டிற்கு தலைமை தாங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:- இந்தியாவில் கல்வியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. உயர்கல்வியில் உள்ள தடைகளை தகர்த்து அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இந்த மாநாடு உதவும். இந்த மாநாடு மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும். பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமாரின் பங்கு இந்த கருத்தரங்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

உயர்கல்வி வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என துணைவேந்தர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பல்கலைக்கழகங்கள் சில ஆண்டுகள் மட்டும் செயல்படக்கூடியவை அல்ல. நூற்றாண்டுகள் செயல்படக்கூடியவை. பல்கலைக்கழகங்களின் அடித்தளம் சிறப்பாக இருந்தால், அடுத்த கட்டங்களுக்கு எளிதில் நகர்ந்து சென்று தொலைநோக்கு கல்வியை வழங்க முடியும். மாணவர்கள் மத்தியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே, கல்வியாளர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும்.

பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் 50 சதவீத பேராசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ள நிலையில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுத்து பயன்படுத்தி வருவதால் அவர்களிடம் இருந்து சிறந்த வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலை எதிர்பார்க்க முடியாது. அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமப்புறங்களுக்கு கல்லூரி மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். இதுதான் கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலையா? உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பள்ளிக்கு தேவையான மேஜை, தண்ணீர் தொட்டி உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 1500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றாலும், அதில் 5 சதவீதம் மாணவர்களே திறன் மிக்கவர்களாக உள்ளனர்.

மற்ற மாணவர்களின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. நெட் தேர்வு குறித்து அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் விழிப்புணர்வு உள்ளது. இதனால் அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் குறைந்த அளவிலேயே நெட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவுகளின் பாடத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அதிர்ச்சியும் அவநம்பிக்கையும் அடைந்தேன்.

வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட ஒரு சில சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு மட்டுமே உள்ளது. மற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலித் தலைவர்கள் பற்றிய வரலாறும் இல்லை. ஆனால் திராவிட தலைவர்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் குறித்த வரலாறு அதிக அளவில் உள்ளது. திராவிட வரலாறு, வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஆனால் அதுவே முழு வரலாறு என்று அர்த்தம் இல்லை. வரலாற்றை மறைப்பது, வரலாற்றை அவமதிப்பதாகும். தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர்.

தமிழகத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தின் தாக்கத்தை ஆய்வு செய்ய வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆங்கிலேயர்களால் மலேசியா, பிஜி மற்றும் பிற இடங்களில் உள்ள அவர்களது காலனிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் கிட்டத்தட்ட அடிமைகளைப் போலவே நில உரிமையாளர்களுக்கு விற்கப்பட்டனர். வங்காளத்தின் வகுப்புவாதப் பிரிவினையின்போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடந்தது . ஆனால் அதுகுறித்து பாடத்திட்டத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. ஜாலியன் வாலாபாக் படுகொலை போல தேவகோட்டையில் ஆங்கிலேயர்களால் 75 பேர் கொல்லப்பட்ட சம்பவம் வரலாறில் இடம்பெறவில்லை.

மாணவர்களுக்கு அவர்களின் வரலாறு தெரியாவிட்டால், இந்தியாவுடன் அவர்களுக்கு என்ன தொடர்பு உள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை அழிப்பது, தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயலாகும். உயர் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ், செயற்கை செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அறிய வேண்டும். அறியாவிட்டால் நாம் பின் தங்கிவிடுவோம். இதனால், ஏற்றதாழ்வு அதிகரிக்கும். தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உலகில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். நம் நாடு முன்னேறி வரும் நாடாக உள்ளது. மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார்கள். அவர்களை நீங்கள் சரியான வழியில் வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News