32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? - அன்புமணி
அனைத்து துறைகளின் நியமனங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தான் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் 32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். அதற்கு விளக்கமளிக்கும் வகையில் சில புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை முழுமையானவை அல்ல, தெளிவானவையும் அல்ல. ஆனாலும் விளக்கமளிக்க தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
60,567 அரசு பணியிடங்களில் தேர்வாணையங்கள் மூலம் 27,858 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 32,709 பேர் பல்வேறு துறைகளில் , அந்தந்தை துறைகளில் கடைபிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், அரசுத்துறைகளும், பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் தனித்தனியாக பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஊழல்களும், முறைகேடுகளும் நடப்பதால் இனி அனைத்து துறைகளின் நியமனங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தான் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.
அப்படியானால் பல்வேறு துறைகளுக்கு நேரடியாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? அது சட்டவிரோதம் அல்லவா? அரசுத் துறைகளுக்கு நேரடியாக பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழக்கமான நடைமுறை என்றால் என்ன? கடந்த செப்டம்பர் மாதம் அரசு வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை வெளியிட்ட முதலமைச்சர் இந்த விவரங்களை வெளியிடாதது ஏன்? அரசுத்துறைகளால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் நிரந்தரப் பணியாளர்களா? தற்காலிகப் பணியாளர்களா? கடந்த 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதே காலத்தில் அரசுத் துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை வெளியிட அரசு மறுப்பது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும்; தற்காலிகப் பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா அல்லது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றம் தான் பரிசாக அளிக்கப்படுமா? என்பதையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.