குடும்ப தகராறு – கணவன் தற்கொலை
பரமத்திவேலூர் அருகே குடும்ப தகராற்றால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (29). இவர் கரூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் ராஜலட்சுமி (24). இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கணவன், மனைவி இடையே கடந்த இரண்டு வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் விவாகாரத்து கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாலகிருஷ்ணன் மணமடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது மனைவி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அருகில் இருந்தவர்களை அழைத்து அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,