தமிழிசை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் - திருச்சி சூர்யா!
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியுடன் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா வாழ்த்தினார். அப்போது செய்தியலர்களை சந்தித்த அவர், ''மத்திய அமைச்சரவையில் தமிழர்கள் இடம்பெறாதது வருத்தமாக உள்ளது.
இது போன்ற வருத்தம் உள்ள மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், மூன்று பேர் மத்திய அமைச்சராகவும், மூன்று பேர் ஆளுநர்களாகவும் உள்ளனர். வருகின்ற 2026இல் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதரவுடன் தான் பயணிக்க முடியும் என்பதை நாங்கள் முதன்முதலாக உடைத்து இருக்கிறோம்.
திமுகவினர் சிலர் ஆட்டுக்கு பாஜக தலைவரின் புகைப்படத்தை மாட்டிவிட்டு அதை நடு ரோட்டில் வெட்டுகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு தமிழிசை எங்காவது அதற்கு கண்டனம் தெரிவித்தார்களா? அவங்களை பரட்டை எனச் சொன்னது கோபம் வருகிறது. ஆனால் மாநில தலைவரின் புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் மாட்டி அதே திமுக காரர்கள் நடுரோட்டில் வெட்டுவதற்கு தமிழிசை கண்டனம் தெரிவிச்சாரா? அதை எல்லாம் பேசாதவர்கள் இதை ஏன் பேச வேண்டும். உங்களுக்கு கருத்து இருந்தால் முன்னாள் மாநில தலைவர் என்ற கட்டுப்பாடுடன் கட்சித் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும். பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன். ஒரு குற்றப்பின்னணியில் வருவோரை கட்சியில் சேர்த்தார்கள் என்று கணக்கு காட்ட வேண்டும். அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அது நடந்தது முன்னாள் மாநில தலைவர்கள் இருந்த சூழ்நிலையில்தான்'' என்றார்.