பாஜக வெற்றி பெற்றால் இனி தேர்தல் நடக்காது
மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இனி தேர்தலே நடக்காது என புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அதன் நிர்வாகிகள் மாநகர ஒருங்கிணைப்பாளர் சுஜித், நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவன், தூத்துக்குடி பகுதி பொறுப்பாளர் உத்தரம், அம்பை பகுதி பொறுப்பாளர் பாண்டியன், வீரவநல்லூர் பகுதி பொறுப்பாளர் பெரியார் பித்தன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டுகாலமாக பாஜக ஆட்சியின் மதவெறி மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மோடியின் மீது பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர். அந்த வெறுப்பை பொய் புரட்டுகள் மூலம் திசை திருப்பி மீண்டும் ஆட்சியை பிடித்து விடும் வெறியோடு உள்ளது. பாஜக தமிழகத்தில் பாமக மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்த போது எட்டி பார்க்காத மோடி வெள்ள நிவாரணமாக 1 பைசா கூட கொடுக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மோடி, ஓட்டுக்காக மட்டும் ஓடோடி வந்து கொண்டிருக்கிறார்.
தன்னிட்சையாக செயல்படக்கூடிய அமைப்புகளாக தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி போன்றவற்றை ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கருவிகளாக மாற்றியுள்ளனர். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே போலீஸ், ஒரே தேர்தல், ஒரே வரி என எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கையில் குவித்து மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து எல்லாற்றுக்கும் ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையை உருவாக்கியுள்ளது. பாஜகவிற்கு எதிராக விமர்சிக்கின்ற போராடுகின்ற சிறிய இயக்கங்களையும், தனி நபர்களையும் ஒடுக்க உபா போன்ற சட்டங்கள் மூலம் பழிவாங்கி வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இனி தேர்தல் நடக்காது. மனு நீதி சட்டமே அரசியலமைப்புச் சட்டமாக்கப்படும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஜனநாயகத்தை புதைத்து விட்டு மதவாத பிற்போக்கு சாம்ராஜ்ஜியமாக மாற்றி மோடி அதன் சக்கரவர்த்தியாக முடிசூட்டுவார். எனவே, ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளும் பாஜக வீழ்த்தியே ஆக வேண்டும் என்று தெரிவித்தனர்.