அமைச்சர் சக்கரபாணி மூலம் வந்தால் திட்டங்கள் கிடைக்கும் - தங்கம் தென்னரசு கலகலப்பு பேச்சு !
சட்டப்பேரவையில் பேசிய நெய்வேலி தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் பழனி கோயிலுக்கு சகாய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, பழனி கோயிலுக்கு சகாயத் தொகையை 25 சதவீதம் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சிவபெருமானை பார்ப்பதற்கு முன் நந்தியவர்மனை பார்ப்பது போல, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த திட்டங்கள் வேண்டுமென்றால் அமைச்சர் சக்கரபாணி மூலம் வருவதாகவும், இதனால் உடனடியாக கிடைத்துவிடும் என்றும் கலகலப்பாக பேசினார்.
மேலும் தொல்லியல் துறை சார்ந்த 9 புதிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்:
''தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளை படித்து நூலாக வெளிக்கொணரும் சிறப்பு திட்டம் ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சின்னங்களை மேம்படுத்தி உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் புதிதாக மின்னொளியுடன் கூடிய சிற்பக்காட்சிக்கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் உட்கட்டமைப்பு மற்றும் முகப்பு மின்விளக்குகள் ரூ.2.75 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதியினை ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உள்ளடக்கிய புதியதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
தொல்லியல் துறையின் அகழ்வைப்பகங்களுக்கான மேம்பாட்டு நிதியினை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
தொல்லியல் துறையில் 20 சார் அலுவலகங்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கு மடிக்கணினி கேமரா மற்றும் உபகரணங்கள் ரூ.50 லட்சம் செலவில் வாங்கி வழங்கப்படும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.