ஆட்டோவில், 1000 கி.மீ. சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர்

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.

Update: 2024-01-02 04:49 GMT
 ஆட்டோவில் சுற்றுலா செல்ல புறப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள்.

ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி வெளிநாட்டு பயணிகளைக் கவரும் விதமாக ஆட்டோவில் சுற்றுலா செல்லும் திட்டத்தை சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றனர். நிகழாண்டு 13 ஆம் ஆண்டாக ஆட்டோவில் சுற்றுலா செல்வது சென்னையில் டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 16 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 26 பேர் ஒன்பது ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர்.

ஆட்டோவில் 3 பேர் வீதம் பயணம் செய்யும் இவர்கள் தாங்களே ஓட்டிச் செல்கின்றனர். ஒரு நாளைக்கு 100 கி.மீ. வீதம் பயணம் செய்து, அந்தந்த பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருகின்றனர். இதன்படி, தஞ்சாவூருக்கு சனிக்கிழமை இரவு வந்த இவர்கள் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை பெரியகோயிலுக்குச் சென்று கட்டடக்கலை, சிற்பக் கலையை உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டனர். இதையடுத்து, காலையில் மதுரைக்கு ஆட்டோக்களில் புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்தை ஜனவரி 6 ஆம் தேதி சென்றடைகின்றனர். இந்தச் சுற்றுலா திட்டத்தில் மொத்தம் ஆயிரம் கி.மீ. பயணம் மேற்கொள்ளப்படுவதாக இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரின்சிலி தெரிவித்தார்.

Tags:    

Similar News