தஞ்சாவூரில் மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டியவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
தஞ்சாவூரில் மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு, காரில் தப்பிச் சென்ற கணவர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்த இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வேலை விட்டுவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவரது மனைவி நித்யா (39), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டை விற்கும் முயற்சி தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே மூன்று நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த டிவி உள்ளிட்ட சாதனங்களை சுந்தர்கணேஷ் அடித்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் நித்யாவை சுந்தர் கணேஷ் அரிவாளால் கழுத்து, கையில் வெட்டி விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றார். பின்னர், பரிசுத்தம் நகரில் பால் விற்பனை டெப்போ நடத்தி வரும் கீழத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன்(35), கோபியை(32) சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டினார். பலத்த காயமடைந்த நித்யா தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், தாமரைச்செல்வன், கோபி ஆகிய இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தாமரைச்செல்வனையும், கோபியையும் அரிவாளால் வெட்டிய சுந்தர் கணேஷ் காரில் தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தப்பிச் சென்று கொண்டிருந்தார். செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் சென்ற கார், நிலைதடுமாறி எதிர் திசையில் வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த சுந்தர் கணேஷ் அதே இடத்திலேயே உயிரிழந்தார். இந்த 3 சம்பவங்கள் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தெற்கு, செங்கிப்பட்டி ஆகிய காவல் நிலையத்தினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த இரு ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் உச்சமாக கடந்த மூன்று நாட்களாக தகராறு ஏற்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை மனைவியை வெட்டியுள்ளார். அதே போல் இவர்களது வீட்டுக்கு பால் விநியோகம் செய்யும் இளைஞர்களை எதற்காக சுந்தர்கணேஷ் வெட்டினார் எனத் தெரியவில்லை. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மூவரையும் வெட்டிய சங்கர் கணேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தான் தஞ்சாவூர் நகரப் பகுதிக்குள்ளேயே காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று, அதன்பிறகு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.