`இந்தியா' கூட்டணி ஆலோசனை.. பிளானை மாற்றிய CM ஸ்டாலின் !
ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, ஜூன் 1ஆம் தேதி அன்று முக்கிய ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி கட்சியினருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நாளை மாலை 3 மணி போல் அவரது தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தான் பங்கேற்க மாட்டேன் தனது கட்சி சார்பில் பிரதிநிதி ஒருவர் பங்கேற்பார் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்வார் என கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் ஆன டிஆர் பாலு பங்கேற்பார் என தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.