சென்னையில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன்மையம் - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Update: 2024-09-04 06:01 GMT

 மு.க.ஸ்டாலின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். சமீபத்தில் சில நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சான் பிரான்ஸிக்கோ சென்ற முதல்வருக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பளித்திருந்தனர். பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு முதலீட்டாளர்கள், முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்படி, ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் தொழில் மையங்களை அமைக்க உள்ளன. இதனை தொடர்ந்து இன்று மேலும் இரண்டு நிறுவனங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன. அதாவது மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன்மையத்தை சென்னையில் அமைத்திட முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடன் ரூ. 1,300 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags:    

Similar News