நார்வே நாட்டுடன் அறிவுசார் பரிமாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் முயற்சி
நார்வே நாட்டு ஆசிரியர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தும், நமது ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும் அறிவுசார் பரிமாற்றம் மேற் கொள்வதற்கான வரைவுத் திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன் வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கத்திய நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக(The New Western Norway University) நூலகத்தைப் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். நார்வே நாட்டு ஆசிரியப் பெருமக்களை நமது தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தும், நமது ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும் அறிவுசார் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் முன் வைத்தார்.
அத்திட்டத்திற்கான ஒப்புதலை பெறும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்த புத்தகத்தை அவர்களிடம் வழங்கி, அத்திட்டங்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து, தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.