கருவாடு காயவைக்கும் பணி தீவிரம்
சேதுபாவாசத்திரம் பகுதியில் 2 மாதங்களுக்கு பிறகு கருவாடு காயவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
Update: 2023-12-28 11:16 GMT
சேதுபாவாசத்திரம் பகுதியில் 2 மாதங்களுக்கு பிறகு கருவாடு காயவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு முதல் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டிணம், செம்பியன் மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4500 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகளும் உள்ளன. இந்த படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன்,கணவாய் போன்றவற்றை உடனடியாக விற்பனை செய்கிறார்கள். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு மீன்களை விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். மேலும் கழிவாக கூடிய மீன்களையும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடுகளாக்கி விற்பனை செய்து வருகின்றனர். உணவிற்கு பயன்படும் கருவாடுகளை விட கோழிகளுக்கு தீவனமாகப் பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இவ்வகைமீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காய வைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என ஏராளமானோர் வேலை செய்து வந்தனர். கடந்த 2 மாதங்களாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்து இதனால் கடந்த 2 மாதங்களாக கருவாடுகளை காய வைக்க முடியாமல் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் வேலை செய்து வந்த பலர் வேலையிழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக வெயில் அடித்து வருவதால் தங்கு தடையின்றி கருவாடு காயவைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.