பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - சேகர்பாபு
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது என - அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 30வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு , தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து நிலை அலுவலர்கள் பங்கேற்கும் 30 – வது சீராய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்தும், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத் தீர்மானங்களை நிறைவேற்றிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அமைக்கப்படவே இல்லை. ஆனால், முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆலோசனைக் குழுவிற்கு உறுப்பினர்களாக ஆதீன பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியமிக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கூட்டமும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இரண்டாவது கட்டமாக திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்களை புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள் வெளியிடப்பட்டன.
கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ.2 லட்சத்தை ரூ.2.5 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும், சட்டப்பிரிவு 49(i) ன் கீழ் வருகின்ற நிதிவசதியில்லாத திருக்கோயில்களில் திருப்பணி செய்திடும் வகையில் முதற்கட்டமாக 500 திருக்கோயில்களில் அரசு நிதி மற்றும் துறை நிதியின் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளவும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள 14 சமணத் திருக்கோயில்களை புனரமைக்க எந்த ஆட்சியிலும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் தற்போது ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் 100 புதிய குடியிருப்புகள் உருவாக்கிடவும், திருக்கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய 500 தற்காலிக பணியாளர்களை பணி வரன்முறை செய்திடவும், பதிப்பகப் பிரிவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 216 அரிய பக்தி நூல்களை உலகெங்கிலுமுள்ள ஆன்மீக அன்பர்கள் படித்து பயன்பெறும் வகையில் மின் நூல்களாக (E-Book) வெளியிடவும், ஏற்கனவே, 103 திருக்கோயில்களில் உள்ள புத்தக விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 100 புத்தக விற்பனை நிலையங்களை ஏற்படுத்தவும், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருக பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவதென்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டத்தை செயல்படுத்திடவும், கிராம தெய்வ வழிபாட்டை ஆன்மிக அன்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அத்திருக்கோயில் வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த 10 தீர்மானங்களை நிறைவேற்றிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்றபின், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், திருக்கோயில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது திருக்கோயில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பணிபுரிந்து பணி காலத்தில் இயற்கை எய்திய 2 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சியில் திருப்பணிகளும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளும் நிறைவேற்றித் தரப்படுவதோடு, பணியாளர்களின் நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன.
பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டீர்கள். திமுகவிற்கு முடிவு எழுதுவோம் என்று சொன்னவர்களின் அரசியல் பாதை முடிவுற்றுயிருக்கிறதே தவிர திமுகவிற்கு இது வரையில் முடிவு என்பதே கிடையாது. இது ஆயிரம் காலத்து பயிர். இந்த கட்சியும், ஆட்சியும் தொடர்ந்து கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் இந்த மண்ணிலே இருக்கும். ஒன்றிய அரசு தேவையான நிதியை மாநிலத்திற்கு கொடுப்பதே இல்லை. வஞ்சிக்கிறது என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் மத்திய அரசிலிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை. வஞ்சிப்பது ஒன்றிய அரசு தான். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளை கருதி மாநில நிதியிலேயே அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துக் கொண்டிருக்கின்றார் என்று தெரிவித்தார்.