கோபிசெட்டிபாளையத்தில் முத்தரசன் பேட்டி

மோடிக்கு நாட்டின் பிரதமருக்கான எந்தவிதமான முதிர்ச்சியும் அவரிடம் இல்லை என கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-11 01:29 GMT

முத்தரசன் பேட்டி

கோபிசெட்டிபாளையம் கச்சேரி மேடு பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலக கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம். இந்த மகளிர் தினத்தில் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் சமூகத்தில் பெண்கள் மத்தியில் எந்த அளவிற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுகிறதோ அந்த அளவிற்கு தான் சமூக மாற்றம் என்பது உறுதிப்படும்.

இன்று சமூக மாற்றத்திற்கு எதிரான பிற்போக்குத்தனமான எத்கைய மாற்றத்தையும் விரும்பாத, ஏற்காத ஒரு ஆட்சி ஒன்றியத்தில் இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இத்தகைய பிற்போக்குத்தனமான சமூக மாற்றத்தை விரும்பாத ஒரு சர்வாதிகாரத்தை விரும்புகிற,பாசிசத்தை விரும்புகிற ஆட்சியை நிராகரிக்கப்படுவதற்கு தாய்மார்கள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டிய சிறந்த நன்னாளாகும்.

இன்றைக்கு இருக்கும் ஆட்சி பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை விரும்பாத ஆட்சி. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தார்கள். இந்த பத்து ஆண்டு காலத்தில் மனப்பூர்வமாக விரும்பி இருந்தால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்தி இருக்கலாம். ஆனால் விருப்பம் இல்லாமல் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக போகிற போக்கில் நாங்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்போகிறோம் என்று அறிவித்து நாட்டையும், நாட்டு மக்களையும் குறிப்பாக பெண்களையும் ஏமாற்றுகிற ஏமாற்ற முயற்சிக்கிற ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பாமல், அதே நேரத்தில் சில நிறுவனங்கள், சில முதலாளிகள், கார்பரேட் முதலாளிகள் அதானி, அம்பானி போன்றவர்கள் வளர வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு ஆட்சி நடத்தி வருகிறார் நரேந்திர மோடி.

இந்த ஆட்சி அகற்றப்பட்டு ஒரு புதிய ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, சாதாரண ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி, விவசாயிகள், தொழிலாளர்களுக்கான ஆட்சியை நிறுவுவதற்கும் உருவாக்குவதற்கும் சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களும் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் பிரதமர் தொடர்ந்து தமிழகம் வருவது தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காக தான் வருகிறார். புயல் அடித்த போதும், இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும், மக்கள் நிர்க்கதியாக நின்ற போதும், தனது வாழ்க்கை ஆதாரங்களை இழந்த போது பிரதமர் வரவில்லை என்பது மட்டுமில்லை, 9 மாவட்டங்கள் இயற்கை பேரிடர்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வேண்டும் என்று தமிழக முதலமைச்சரே நேரடியாக பிரதமரை சந்தித்தார். 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் எந்த பயனும் இல்லை.

ஒற்றை பைசா கூட கொடுக்காத கொடுக்க விரும்பாத, தமிழக மக்களை வஞ்சிக்கிற மோடி அரசாங்கம், இன்றைக்கு தேர்தல் வருகிறது என்பதற்காக வாக்குகளை நயவஞ்சகமாக பெற்று விட வேண்டும் என்று தனக்கே உரிய சூழ்ச்சியை பயன்படுத்தி திரும்ப திரும்ப வந்து கொண்டு இருக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் வரும் போதும், பல ஆயிரம் வாக்குகள் பாஜவிற்கு செல்லாமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மாறும் அளவிற்கு அவரது பேச்சு உள்ளது. ஒரு நாட்டின் பிரதமர், எந்தவிதமான முதிர்ச்சியும் அவரிடம் இல்லை.ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் பொய்யே பேசுகிறார். இரண்டாவது மெட்ரோ திட்டத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம் என்று பேசுகிறார். இரண்டாவது மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சியில், இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்த திட்டத்திற்கான மொத்த செலவில் சரி பாதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்ற நிலையில் இதுவரை ஒரு பைசாவை கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. மாநில அரசு தான் செயல்படுத்தி வருகிறது. அதே போன்று நிவாரணம் வழங்குவதிலும் மாநில அரசு தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நிவாரணம் வழங்கியது. அதற்கும் பிரதமர் எந்தவித உதவியையும் செய்யவில்லை. மக்கள் பாதிக்கப்பட்ட போது வராத, வர விரும்பாத, உதவிகளை செய்ய மறுத்த, நிராகரித்த பிரதமர் தற்பொது வாக்கிற்காக வருகிறார். தமிழக மக்கள் ஏமாளிகள் இல்லை. அவரை நிச்சயமாக நிராகரிப்பார்கள்.

அது மட்டும் இல்லை 140 கோடி மக்களின் குடும்பத்தை சேர்ந்தவர், அவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கம் என்று சொல்கிறார். நான் பிரதமரை கேட்டு கொள்வது, நீங்கள் முதலில் உங்கள் மனைவியோடு சேர்ந்து வாழ முயற்சி மேற்கொள்ளுங்கள். அதன் பிறகு நாட்டு மக்களோடு நீங்கள் சேர்ந்து வாழலாம். மனைவியோடு சேர்ந்து வாழ தெரியாத ஒருவர் நாட்டு மக்களோடு எப்படி சேர்ந்து வாழ முடியும் என்று கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஒரு அணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது இது ஒரு கொள்கைப்பூர்வமான அணி. இங்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. சீட்டு எண்ணிக்கை ஒதுக்குவதிலோ, இடங்களை பகிர்ந்து கொள்வதிலோ ஒரு பிரச்சினையும் கிடையாது. கடந்த தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

இந்த தேர்தலில் நிச்சயமாக, உறுதியாக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இது ஏதோ பெயரளவிற்கு கூறும் கருத்து இல்லை. கடந்த தேர்தலில் அதிமுக, பாஜ, தேமுதிக, தமாக, பாமக என பலரும் சேர்ந்து நின்றனர். தேனி தொகுதியில் மட்டும் ஓ.பி.எஸ்.சின் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றார். மற்ற எந்த தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. ஆனால் இப்போது நெல்லிக்காய் மூட்டை என சிதறிக்கிடக்கும் நிலையில் இந்த சூழ்நிலையில் எங்கள் அணி அரசியல் ரீதியாக அமைப்பு ரீதியாக பலமான அணியாக இருப்பதால் எங்கள் அணி நிச்சயமாக வெற்றி பெறும். அதே போன்ற நாடாளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் நிச்சயமாக மாற்றத்தை விரும்புகிறார்கள், இந்தியா கூட்டணியை வெற்றி பெறச்செய்வார்கள்.

மோடி நிச்சயமாக மூன்றாவது முறையாக பிரதமராக வருவதற்கு எந்த வித வாய்ப்பும் இல்லை. அதிமுகவை பொறுத்தவரை, அவங்களோடு யார் வருகிறார்களோ அவர்களை சேர்த்துக்வொண்டு போட்டியிடுவார்கள்.அவர்களால் பெரிய விளைவை ஏற்படுத்த முடியாது. அதே போன்று பாஜவுடனும் யாரும் விரும்பி கூட்டணி சேர்வதில்லை. அவர்களாக சேர்த்துக்கொள்வது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை தான் கூட்டணி. இந்த கூட்டணியை வைத்து பாஜ தேர்தல் பணியாற்றுவார்கள் என்றார்.

Tags:    

Similar News