இஸ்லாமிய பள்ளிவாசல் கந்தூரி விழா - இந்துக்கள் சீர்வரிசை
அருப்புக்கோட்டை அருகே வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலில் நடைபெற்ற கந்தூரி திருவிழாவிற்கு இந்து மத மக்கள் ஊர்வலமாக வந்து சீர்வரிசை வழங்கிய நிகழ்வு தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக இருந்தது.
Update: 2024-02-09 05:29 GMT
இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாவான கந்தூரி திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது இந்நிலையில் அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது. நாடார்கள் உறவின்முறை அலுவலகத்தில் இருந்து இந்து சமுதாய மக்கள் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலுக்கு சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர். பள்ளிவாசலுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்து சமுதாய மக்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்று சீர்வரிசையை பெற்றுக் கொண்டனர். பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகைக்கு பின் அனைவருக்கும் கந்தூரி விருந்து அளிக்கப்பட்டது. இந்தப் பள்ளிவாசலுக்கு இந்து சமுதாய மக்கள் சீர்வரிசை கொண்டு வந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கந்தூரி விழா நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி ,ஏ.எஸ்.பி கருண் கரட், நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.