சென்னை மாநகராட்சியுடன் வானகரம்-அடையாளம்பட்டு கிராம ஊராட்சிகள் இணைகிறது!!

சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Update: 2025-01-02 08:33 GMT

சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஒரு மாநகராட்சி இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 24 மாவட்டங்களில் 25 மாநகராட்சிகள் உள்ளன. ஆகவே மீதம் உள்ள 14 மாவட்டங்களிலும் மாநகராட்சிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் தற்போது உள்ள மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளது. அதன்படி சென்னை மாநகரட்சியும் விரிவு படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியானது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 66.72 லட்சம் மக்கள் தொகையையும், 426 சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்டதாகும். தற்போதுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இவ்விரு கிராம ஊராட்சிகளின் பரப்பளவு சுமார் 15.77 சதுர கி.மீ. ஆகும் மற்றும் மக்கள் தொகை சுமார் 32,353 ஆகும். இவ்விணைப்பிற்கு பிறகு பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லை சுமார் 442 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் அடையும் மற்றும் மொத்த மக்கள் தொகை 67,04,455 ஆக அதிகரிக்கும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள 2 கிராம ஊராட்சிகள் இணைப்பால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன் அடிப்படை வசதிகளும் மேம்படும். இது தொடர்பாக மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News