கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் - வேல்முருகன் இரங்கல்
கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரிகளையும், அவர்களுக்கு துணை போன அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் அனைவர் மீதும் அவர்கள் எத்தகைய செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்தாகவும் மீதமுள்ளோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்திற்க்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரிகளையும் அவர்களுக்கு துணை போன அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோர் அனைவர் மீதும் அவர்கள் எத்தகைய செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு இனிவரும் காலங்களில் இது போன்ற கள்ளச்சாராய சாவுகளை தடுக்கும் வகையில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளும் அதே வேளையில் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும்,அவர்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.