கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் :யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் - எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். முதல்வரிடம் தெரிவித்து நிவாரண நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் வேலு, சுப்ரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
அப்போது அமைச்சர் வேலு கூறியதாவது; கள்ளசாராயம் குடித்து சாராயம் குடித்து பாதித்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தது தெரியவந்துள்ளது. சாராயம் விற்பனை செய்த கருணாபுரம் சேர்ந்த கண்ணுக்குடி, அவரது சகோதரர் தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களிடமிருந்து யாரேனும் சாராயம் வாங்கி விற்பனை செய்துள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காவல் துறையினர் மெத்தன போக்கால், எஸ்.பி., உட்பட தொடர்புடைய காவல் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாராயம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். முதல்வரிடம் தெரிவித்து நிவாரண நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.