கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் - எஸ்டிபிஐ கண்டனம்
கள்ளச்சாராய விற்பனை கும்பலை ஒடுக்கவும், கண்காணிக்க தவறியதுமே தொடரும் உயிர் பலிகளுக்கு காரணம் என எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராய விற்பனைக்காக பலமுறை சிறைச் சென்ற குற்றவாளி ஒருவர் சட்டவிரோதமாக விற்பனை செய்த விஷச்சாராயத்தை குடித்தே இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் கள்ளச்சாராய விற்பனைக் கும்பல் மீதான காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுகின்றது. காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் துணையுடன் தான் இதுபோன்ற சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகின்றது என்கிற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பலமுறை சிறைச் சென்றவரை கண்காணிக்க தவறியதும் அதன் மூலம் விற்பனைக்கு துணை போனதும் கண்டிக்கத்தக்கது. கள்ளச்சாராய விற்பனை கும்பலை ஒடுக்கவும், கண்காணிக்க தவறியதுமே தொடரும் உயிர் பலிகளுக்கு காரணம். கடந்த ஆண்டு தான் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியாயினர்.
இந்நிலையில் மீண்டும் இப்பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்பு நடந்தேறியுள்ளது. இதன்மூலம் கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்குப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுகின்றது. இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்த பிறகு சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை மதுவிலக்குப் பிரிவு கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை முன்னரே மேற்கொண்டிருந்தால் அசம்பாவிதங்களை தடுத்திருக்க முடியும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் விற்பனை மூலம் உயிர் பலிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, கள்ளச்சாராய பின்புலத்தில் உள்ள அனைவர் மீதும் பாரபட்சம் பாராமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தவறிழைத்த அனைத்து அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, காவல்துறை மதுவிலக்குப் பிரிவின் செயல்பாட்டை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.