திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: குவிந்த பக்தர்கள்

Update: 2023-11-17 02:44 GMT

கந்த சஷ்டி விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். இத்திருவிழா கடந்த திங்கள்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4ஆம் நாளான வியாழக்கிழமை காலை சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமா்ந்து, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மாலையில், திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா், சுவாமி தங்க ரதத்தில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.  இதே நிகழ்ச்சிகள் 5ஆம் நாளான இன்றும் நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை 4 மணிக்கு கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து விரதமிருக்கின்றனா். இதனால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அவா்கள் பக்திப் பாடல்கள் பாடியும், கிராமியக் கலைஞா்கள் கும்மியடித்தும் முருகனை பிராா்த்தித்து வருகின்றனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அருள்முருகன், இணை ஆணையா்  காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன்,  கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Tags:    

Similar News