கண்டன்விளை ஆலய மணிகளை பார்வையிட 3 நாட்கள் அனுமதி
குமரி மாவட்டம் கண்டன்விளையில் குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. உலகிலேயே புனிதராக அறிவிக்கும் முன்பே சிறுமலர் தெரேசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம் ஆகும். இந்த ஆலயம் 1924ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டது. புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த இரண்டு சகோதரிகளால் 1931-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் உள்ள இந்த 2 ஆலய மணிகளும் இன்று (20ம் தேதி) முதல் 22ம் தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 ஆலய மணிகளில் ஒன்றில் புனித தெரசா உருவப்படமும், மற்றொன்றில் திருச்சிலுவையும் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆலய மணியில் "புனித தெரேசாவாகிய நான் இந்தியாவில் உள்ள அனைத்து பக்தர்களையும் கண்டன்விளைக்கு அழைப்பேன்" என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த 2 ஆலய மணிகளும் 92 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பழமை மாறாமல் புத்தம் புதிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.