மோடியை எதிர்த்து எடப்பாடி ஒரு வார்த்தை பேசமாட்டார் - கனிமொழி கேள்வி
தூத்துக்குடிக்கு ஏன் வெள்ள நிவாரணம் தரவில்லை என்று ஒரு வார்த்தை மோடியை கேட்டிருக்கிறாரா எடப்பாடி? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனை, நாகம்பட்டி, குதிரைகுளம், பரமன்பச்சேரி, சில்லாங்குளம், கீழமங்கலம், மேலமங்கலம், மேலமுடிமன், கீழமுடிமன், பி.துரைச்சாமிபுரம், பி.மீனாட்சிபுரம், எப்போதும் வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், குமரெட்டியாபுரம், வெள்ளாரம், கச்சேரிதளவாய்புரம், சிவஞானபுரம், வீரபாண்டியபுரம், டி.சுப்பையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கனிமொழி கருணாநிதி எம்பி. பேசும்போது, "நான் எம்.பி.யாக இருந்த இந்த காலகட்டத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்று பசுவந்தனை ஊராட்சியில் 15 லட்சம் ரூபாய் கலையரங்கம் கட்டும் பணிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை விரைவில் தொடங்கும். குதிரைகுளம் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டன. இது இல்லாமல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் பள்ளி கழிவறைக் கட்டிடங்கள் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் மொத்தம் 51 லட்சம் மதிப்பில் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.