வியாபாரிகளிடம் கனிமொழி வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி வ உ சி மார்க்கெட்டில் எம்பி கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி வ உ சி சந்தையில் அமைச்சர் கீதா ஜீவனுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வ உ சி சந்தையில் அமைந்துள்ள காய்கறி கடைகள் மீன் வியாபாரிகள் ,கருவாடு வியாபாரிகள் மற்றும் இறைச்சி வியாபாரிகள் ஆகியோரிடம் அவர்கள் இருக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதுடன் சந்தைக்கு வந்திருந்த பொதுமக்களிடமும் தங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது வியாபாரிகளிடம் மீன் கருவாடு குறித்து கேட்டறிந்தார். அப்போது வ.உ.சி சந்தை வியாபாரிகள் இந்த சந்தை இடிக்கப்படாமல் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த தங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் வாக்களிக்க தங்கள் விரல் நீலும் என தெரிவித்தார். அப்போது கனிமொழி கருணாநிதி அழகாக பேசுகிறீர்கள் என அவரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி சந்தை அருகே உள்ள பாரம்பரியமான தூத்துக்குடியின் புகழ் பெற்ற மக்ரோன் தயாரிக்கும் பகுதிக்கு சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமும் கனிமொழி வாக்கு சேகரித்தார் பின்னர் அவர்களிடம் உலகப் புகழ்மிக்க சுவை மிகுந்த மக்ரோனை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என கேட்டறிந்தார். இந்த பிரச்சாரத்தின் போது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.