கன்னியாகுமரி மீனவர்கள் படகுடன் சிறை பிடிப்பு : பரபரப்பு

மணப்பாடு அருகே கன்னியாகுமரியைச் சேர்ந்த 11 மீனவர்களுடன் விசைப்படகை மணப்பாடு மீனவர்கள் சிறைபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-22 02:11 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளா மற்றும் கன்னியாகுமரியைச்  சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து வருவதை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தூத்துக்குடி ஆழ்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரளாவை சேர்ந்த ஒரு படகு மற்றும் குளச்சலை சேர்ந்த 5 படகு உட்பட 6 படகுகளையும், அதில் இருந்த 86 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறை பிடித்து மீன்பிடிதுறைமுக பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் மணப்பாடு கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கன்னியாகுமரியைச் சேர்ந்த விசைப்படகை சிறைபிடித்து அதிலிருந்த 11 மீனவர்களுடன் மணப்பாடு மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். அந்த படகு கன்னியாகுமரியைச் சேர்ந்த டேவிட் ராஜ் என்பவருக்கு சொந்தமானது என்றும், படகில் இருந்த 9பேர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள் என்றும் 2பேர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

மணப்பாட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி மீன்வளத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவம் தொடர்ந்து வருவதால் தூத்துக்குடி - குமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில் மோதல் சூழல் எழுந்து வருகிறது. மீனவர்களின் போராட்டம் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்களால் இரு மாவட்ட மீனவர்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News