ஊட்டி வருகிறார் கர்நாடக முதலமைச்சர்!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் இன்று 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டி வருகிறார்.
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் முதல் கட்டமாக தேர்தல் முடிந்தது. இதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 26ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற இன்று நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் வரலாறு காணாத வகையில் சுட்டெரித்து வருவதால், தேர்தல் பணிகள் முடிந்ததும் குளிர் பிரதேசங்களுக்கு செல்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் கொடைக்கானல் சென்றார். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தேர்தல் பரப்புரை முடிந்து 5 நாள் ஓய்வெடுக்க நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வருகிறார்.
இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் மைதானம் வருகிறார். அங்கிருந்து காரில் ஊட்டி வென்லாக் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். வருகிற 11ம் தேதி வரை 5 நாட்கள் இங்கிருந்து கர்நாடக மாநில தோட்டக்கலை துறை பூங்கா உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக முதலமைச்சர் வருகையையொட்டி நீலகிரி போலீஸார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.